சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ஆம் நாளான நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவையொட்டி, சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.
நாதஸ்வரம், செண்டை மேளம், சிவ வாத்தியங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தேரோடும் வீதிகள் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதுதவிர தேர் வரும் சாலையில் பெண்கள் வண்ண, வண்ண கோலமிட்டு சாமியை வரவேற்றனர். மேலும் காளியாட்டம், பரதநாட்டியமும் நடந்தது. சிவன், பார்வதி வேடமிட்ட பக்தர்களும் கைலாய வாத்திய கருவிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடினர். சில பெண்கள் கும்மியடித்தும், கோலாட்டம் அடித்தும் தேரை வரவேற்றனர்.
தேர் தெற்கு வீதி, வடக்கு வீதியை வந்தடைந்ததும், அங்கு மீனவர்கள் சார்பில் சிறப்பு மண்டகபடி அளிக்கப்பட்டது. அதன்பிறகு தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.
பின்னர் தேரில் இருந்து சுவாமிகள் இறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. நாளை (ஜன.14ம் தேதி) முத்துப்பல்லக்கு வீதியுலாவும், நாளை மறுநாள் (ஜன.15ம் தேதி) புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்பக்குளத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் உற்சவம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.