
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 315வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் விழா நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:
சுதந்திரப் போராட்ட தியாகிகளை, வீரர்களை உருவாக்கிய மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். சுதந்திர போராட்ட வரலாற்றில் தூத்துக்குடி மண்ணிற்கு முக்கிய பங்கு உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரத்திலகமாய் விளங்கும் வீரன் அழகுமுத்துக்கோன் இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தமிழ்நாடு அரசு வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பெருமையை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கட்டாலங்குளத்தில் அவரது உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் அரசு சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமை கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தார் வட்டாட்சியர் சுந்தரராகவன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.