
சித்திரை மாத திருவோணத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் மங்கள இசையுடன் கலச ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மூலவர் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சபையின் முகப்பு மண்டபத்தில் ஆனந்த நடராஜ பெருமானுக்கு 16 வகை சுகந்த பரிமள திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியுடன் உச்சி காலத்தில் சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும் மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலிலும் சித்திரை மாத திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தர்மபுரி கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய ஸ்ரீ மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ சித்திலிங்கேஸ்வரர் கோவில், செவல்பட்டி ஸ்ரீ ஆதி லிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீசிவகாமி சமேத நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், குங்குமம், பால், தயிர், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு ராஜ அலங்காரம் செய்தும், ஆராதனை செய்தும், மலர்களால் அர்ச்சனை செய்தும் பக்தர்கள் நடராஜ பெருமானை வழிபட்டனர்.