3.2.2025 – ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் குரு பூஜை
கலிக்கம்ப நாயனார், திருஞானசம்பந்தர் போலவோ, திருநாவுக்கரசரைப் போலவோ, சுந்தரரைப் போலவோ திருத்தலம் தோறும் சென்று இறைவனைப் பற்றிப் பாடவில்லை. மக்களைச் சந்தித்து உபதேசம் செய்து தங்கள் வழிக்கு வரும்படி அவர்களை அழைக்கவில்லை. அதற்குப் பதிலாக தாம் வாழ்ந்த ஊரில் இருந்தபடியே வழிபட்டு வருபவர். அங்கு இருக்கும் மக்களின் குறைகளைப் போக்குகிறார். இறைவனை வழிபடும் சிவனடியார்களுக்கு தினம்தோறும் அரும்பணிசெய்கிறார். கலிக்கம்பரின் வாழ்க்கையே மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருக்கிறது.
தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமான் சிவனடியார்களை இரண்டு வகைகளாகப் பிரித்துக் கண்டிருக்கிறார். ‘அறக்கருணை’யை மேற்கொண்ட அடியார்கள் ஒருவகை. ‘மறக்கருணை’யை மேற்கொண்ட அடியார்கள் இரண்டாவது வகை- 63 அடியார்களில் எறிபத்தர், விறண்மிண்டர், சிறுத்தொண்டர், சண்டேசர், கழற்சிங்கர், செருத்துணையர், கலிக்கம்பர், சத்தியார், மூர்க்கர், முனையடுவார், இயற்பகையார், கண்ணப்பர் போன்ற 12-அடியார்களும் மறக்கருணையை மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்த அடியார்களாவர். ‘வன்றொண்டர்கள்’ எனப்படும் இவர்களை, வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை எப்படி இறைவனின் அன்பர்கள் என்றும், உத்தமர்கள் என்றும் சிவனடியார்கள் என்றும் சொல்லமுடியும்? என்று சிலர் நினைக்கலாம். ‘அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை’ என்ற வள்ளுவர் வாக்குப்படி, மறத்துக்கும் அஃதேதுணையென்று மறக்கருணையுடைய சிவனடியார்களையும் அக்குறள் குறிப்பிடுகின்றது.சுய நலத்துக்காக வன்முறையை பயன்படுத்துவது தண்டிப்பதற்குரியது. பொது நலத்துக்காக வன்முறையை மேற்கொள்வது, தியாக உணர்வை வெளிப்படுத்துவதும், பாராட்டுவதற்கும் உரியதாகும்.மறக்கருணையை மேற்கொண்டு வன்முறையினால் அன்பு செய்தவர்களில் கலிக்கம்பநாயனார் உயர்ந்து விளங்குகிறார். இவர் மேற் கொண்ட வன்முறைகளில் தூய பக்தியே மேலோங்கி இருந்ததால் இறைவனால் பாராட்டப் பெற்று சிறந்த அடியாராக ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார்.சுந்தர மூர்த்தி நாயனார்அருளிய ‘திருத்தொண்டத் தொகையின் விரிவுரைதான் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம். கலிக்கம்பரைப் பற்றி திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் சொல்லி இருப்பதைப் பாருங்கள்.
‘‘கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன், கலியன்
கழற் சத்தி விரிஞ்சையர் கோன் அடையார்க்கும் அடியேன்’’
சுந்தரர் கலிக்கம்பரை ஒரு பெரிய வீரராகவும், ஒரு குறுநில மன்னராகவும் விளங்கியவர் என்கிறார்.கலிக்கம்பர், தமிழ் கூறும் நல்லுலகில் சைவம் தழைத்தோங்க சான்றோர்கள் பலர் அவதரித்த நடுநாட்டில் உள்ள திருத்தலங் களில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வளங்கள் சிறந்த ஒழுக்கம் நிறைந்தவர் வாழும் பழம்பதி, திருத்தூங்கானை மாடம் எனும் சிறப்புப் பெற்ற கடந்தை மாநகரில் 1400-ஆண்டுகளுக்கு முன் வாணியர் குலத்தில் மார்கழி மாதம், பூரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இத்தலத்து இறைவனான அருள்மிகு கடந்தை நாயகி சமேத சுடர்க்கொழுந்தீசுரர் எனும் கை வழங்கீசனாரை தேவகன்னி யரும், காமதேனுவும், வெள்ளை யானையும் பூஜித்தபடியால் இத்திருத்தலம் ‘பெண்ணாகடம்’ என்றும் போற்றப்படுகிறது. இது ஒரு புகழ் பெற்ற திருத்தலம். திருநாவுக்கரசு சுவாமிகள் இத்திருக்கோயிலில் திருப்பதிகம் பாடித் தம் தோளின்மேலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்தருளப் பெற்றதலம். இதையே அவர் ‘மின்னாரு மூவிலைச் சூலமென் மேற் பொறி மேவு’ என்றும் ‘இடவம் பொறித்தென்னை ஏன்று கொள்ளாயிருஞ் சோலை திங்கள் தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந்தத்துவனே’ என்றும் போற்றுகிறார்.
பெண்ணாகடத்தில் அவதரித்த கலிக்கம்பர் சிறந்த வீரர் ஆகவும், குறுநிலமன்னராகவும் விளங்கினார். இவ்வூரில் தூங்கானை மாடம் என்ற சிவன் கோயில் இருக்கிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம் சிவக்கொழுந்தீசர். இறைவி கடந்தை நாயகி எனும் ஸ்ரீ ஆமோதனாம்பாள். கலிக்கம்பர். இத்திருத்தலத்துக்கு வரும் சிவனடியார்களை தம்முடைய இல்லத்துக்கு அழைத்து வருவார். அடியார்களுக்குப் பாத பூஜை செய்வார். அமுது படைத்து உபசரிப்பார். பொருளும் உடையும் வழங்குவார். இது அன்றாடம் நடைபெறும். இப்பெரும் பணிக்குப் பொருள் திரட்ட வணிகத் தொழிலையும் மேற்கொண்டிருந்தார்.‘சிவனடியார் கோலத்தில் யார் வந்தாலும், வருவது எல்லாம் வல்ல சிவபெருமானே!’ என கள்ளங்கபடமின்றி உளமார சிவபக்தியையும், சிவநெறியையும் கருதி சிவ உணர்வோடு, சிவத்தொண்டாக, திருவமுது படைத்தலைத் தவறாமல் நாள்தோறும் செய்துவந்தார். வருகின்ற சிவனடியாருக்கு நீரால் பாதம் கழுவி, மலரிட்டு, பூஜை செய்து, வணங்கி அமுதிடுவதுதான் கலிக்கம்பரின் திருத்தொண்டு ஆகும்.இவ்வாறு நாள்தோறும் சிவன் அடியார்களுக்கு தம் துணைவியார் பத்மாவதியுடன் சேர்ந்து பாத பூஜையும், அமுது படைத்தலும் ஆடை அணிகலன்களை அன்பளிப்பாகக் கொடுத்தலும் செய்துவந்தார்.
ஒரு நாள் கலிக்கம்பர் வந்திருந்த சிவனடியார்களுக்கு முறைப்படி பாதபூஜை செய்யத் தொடங்கினார். வெங்கலத்தாம்பாளங்களில் அடியார்களின் திருவடிகளை வைத்து நீர்வார்த்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். மனைவி பத்மாவதி செம்பில் நீர் எடுத்து அடியார்களின் பாதங்களில் நீர்வார்த்துக்கொண்டிருந்தார்.மண்டியிட்டு அமர்ந்து கலிக்கம்பர் அடியார்களின் திருவடிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு அடியாருக்கு நீர் விடுவது திடீரென்று தடைப்பட்டது.வந்த அந்த சிவனடியாரின் முகத்தை கலிக்கம்பரின் மனைவி பத்மாவதி கூர்ந்து பார்த்தார். திடுக்கிட்டார். ‘அட, இவன் நம் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவன். ஏவலராகப் பணிபுரிந்தவன். ஒழுங்காக வேலை செய்யமாட்டான். கர்வம் பிடித்தவன் இல்லந்தேடி வருபவர்களைச் சிறிதும் மதிக்காதவன். திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வேலைைய விட்டு விட்டு ஓடிப் போனவன் ஆயிற்றே! இந்த மோசமான வேலைக்காரனின் கால்களை அரசரான தம் கணவர் கைகளால் தூய்மை செய்து அலம்பும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கெங்கோ சுற்றி அலைந்து திரிந்து சிவபெருமானின் மெய்யடியார்களுடன் இவனும் ஒரு அடியாராக வந்திருக்கிறானே!’ என எண்ணி மனம் கலங்கி வேதனைப் பட்டாள். அந்த நிலையில் தாம் வைத்திருந்த நீரை அந்த அடியார் பாதங்களில் விடுவதை நிறுத்திவிட்டார்.
மனைவி பத்மாவதியின் மன ஓட்டத்தை அறிந்த கலிக்கம்பர் அதை உணர்ந்து, ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதேபோன்று சிவனடியார்களின் பூர்வீகம் குறித்தும் ஆராய்வது கூடாது. பழைய நினைவுகளை எண்ணி ஏசுவதோடு வெறுப்புணர்வையும் காட்டுகிறாளே! பகைமை நோற்கிறாளே? இறை நிந்தனையைக் காட்டிலும் அடியார் நிந்தனை கொடியது. இறைவனைப் பகைத்தவரும் ஒருகாலத்தில் உயர்வு பெறுவார். ஆனால் அடியாரைப் பாகைத்தவர் எக்காலத்திலும் உய்வு பெறார் என்பதை ஏன் இவள் அறியாமல் மறந்தாள்’ என்று எண்ணியவர், அவள் கையில் வைத்திருந்த நீர்நிறைந்த செம்பைத் தாமே வாங்கிக் கொண்டார். சற்று சினம் கொண்ட அவர், குறுநிலமன்னரான அவர், எப்போதும் தனது இடையில் குறுவாள் ஒன்று தரித்திருப்பாராதலால், அதை எடுத்து சற்றும் யோசியாமல் பாதகம் செய்த அவளிரு கரங்களையும் துண்டித்தார்.தன் தவறை உணர்ந்த பத்மாவதி ஏதும் பேசாமல் குருதி கொப்பளிக்கும் கைகளுடன் சோர்ந்து மயங்கிச் சரிந்தார். அங்கிருந்த சில சிவனடியார்கள், கண்ணிமைப் பொழுதில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு மனம் கலங்கினார்கள். வேதனையுற்றனர். கண்ணீர் வடித்தனர். பேச நா எழாது வாளாவிருந்தனர். அரசர் கலிக்கம்பரின் செயல் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
கலிக்கம்பர் எந்தவித பதற்றமும் இல்லாமல் அடியார்களை அமைதிப்படுத்தி, அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து முடித்து வணங்கி அனுப்பிவைத்தார்.வன்தொண்டரான கலிக்கம்பர் அடியார்கள் மேல் கொண்ட அன்பினை எண்ணி இறைவன் மனம் நெகிழ்ந்தார். அவரது மறக்கருணையை எண்ணிப் பெருமையுற்றார். கலிக்கம்பருக்குக் காட்சி தந்து அவரைத் தம் சிவ கணங்களில் ஒருவராகச் சேர்த்து அருளினார். கலிக்கம்பரின் மனைவியின் வெட்டப்பட்ட கைகள் ஈசன் அருளால் கூடின. இதனால் இத்தல இறைவனுக்கு ‘கை வழங்கீசனார்’ எனப் பெயர் வந்தது. அடுத்த கணம் கணவருடன் அவரும் சிவகணத்துடன் சேர்க்கப்பட்டாள். ‘‘அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும்’’ என்ற சான்றோர் வாக்குப் படி கலிக்கம்பர் முக்தி பெற்றார்.
இந்த அரிய நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில் கூறுவதைப் பாருங்கள்.
‘‘வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வௌ்கி நீர்வாரா
தொழிந் தாள் என்பது மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்.
விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மே செய்து
துளக்கில் சிந்தை யுடன் தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர் பின்னும்
அடுத்த தொண்டின் வழிநின்று
களத்தில் நஞ்சம் அணிந்தவர் தாள்
நிழற்கீழ் அடியாருடன் கலந்தார்.’’
இத்தகைய சிறப்புடைய கலிக்கம்ப நாயனாருக்கு குலவழித் தோன்றல்களாகிய வணிக வைசிய வாணிய சமூகத்தார்களுக்குச் சொந்தமான பெண்ணாகடம், கிழக்கு ராஜவீதியில், கலிக்கம்பர் அவதரித்து வாழ்ந்து முக்தி அடைந்த இடத்தில் ‘ஸ்ரீ கலிக்கம்பர் நாயனார் மடா லயம்’ ஒன்று சிறப்பு அமைந்துள்ளது. இங்கு கலிக்கம்பர் சிலை வடிவில் சந்நிதி கொண்டுள்ளார்.வருகிற தைத்திங்கள் 21-ம் நாள் பிப்ரவரி மாதம் 3.2.2025- திங்கட்கிழமையன்று வளர்பிறை ரேவதி நட்சத்திரத்தில் மகா குரு பூஜை பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்று இரவு மஞ்சள் சப்பரத்தில், ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் உற்சவர் திருமேனி, நாதஸ்வர மேள வாத்தியங்கள் மங்கள இசை முழங்க சிவகைலாய வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் திருவீதியுலா நடைபெறுகிறது.இத்திருத்தலம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாகடம், கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது.
The post ‘‘சிவனடியார் கோலத்தில் வருவோர் எல்லாம் சிவபெருமானே!’’ appeared first on Dinakaran.