சிவநாதபுரம் மலைக்கோயிலை சிதைத்து புதையல் தேடும் கும்பல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ வேலூர் அருகே கூடாரம் அமைத்து

4 hours ago 1

வேலூர், பிப்.12: வேலூர் அருகே சிவநாதபுரம் மலையில் புதையல் தேடும் கும்பல் அங்குள்ள சிவாலயத்தை சிதைத்த சம்பவத்தின் வீடியோ பதிவுகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியையொட்டி கைலாசகிரியும், அதையடுத்து சிவநாதபுரம் மலையும் அமைந்துள்ளது. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அடர்ந்த வனப்பகுதிகளுடன் கொண்ட இம்மலைகளில் வனத்தின் நடுவே பிரிட்டிஷார் காலத்து கண்ணாடி மாளிகையின் சிதிலமடைந்த கட்டிட பகுதியும், பழங்கால ஆதி கைலாசநாதர் கோயிலும், ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஒரு கும்பல் கத்தி, கடப்பாரை, மண்வெட்டி உட்பட பல ஆயுதங்களுடன் நுழைந்து கூடாரமடித்து தங்கி அங்குள்ள சிவாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை சிதைத்துள்ளனர். மேலும் சிதிலமடைந்த கோயில் சுவர்களையும், அதன் அரிய வகை கல்வெட்டு வாசகங்களுடன் சேர்த்து உடைத்து கற்களை பெயர்த்து எடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை உள்ளூரை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளனர். அப்போது கடப்பாரையால் கற்களை பெயர்த்தெடுக்கும் சத்தம் கேட்டு சென்றபோது அங்கு ஒரு கும்பல் கூடாரமடித்து தங்கி கோயிலை பெயர்த்து புதையலை தேடுவது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் வாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் அந்த கும்பல்அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வனத்துறை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவநாதபுரம் மலைக்கோயிலை சிதைத்து புதையல் தேடும் கும்பல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ வேலூர் அருகே கூடாரம் அமைத்து appeared first on Dinakaran.

Read Entire Article