பரமக்குடி, பிப். 12: பரமக்குடி படேல் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (32), அவரது உறவினர் விக்னேஸ்வரன் (29) இருவரும் பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். கடந்த 9ம் தேதி அதிகாலை வைகை ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை விரட்டி உள்ளனர்.
அப்போது சந்திரசேகர் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் சந்திரசேகர், விக்னேஸ்வரன் நின்றபோது 10 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சந்திரசேகர் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், விக்னேஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த புகாரில், பரமக்குடி டவுன் போலீசார் பரமக்குடி அருண்குமார் (22), குமாரக்குறிச்சி சரவணன் (23), காளி என்ற காளீஸ்வரன் (21), எமனேஸ்வரம் சஞ்சீவி (20), பரமக்குடி கருப்பு என்ற காமேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post ஆட்டோ டிரைவர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.