சிவகிரி இரட்டை கொலை வழக்கு: நோட்டமிட்டு கொலை, கொள்ளை அரங்கேற்றம் - ஐ.ஜி. செந்தில் குமார் பேட்டி

2 hours ago 1

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த சூழலில், கடந்த 1ம் தேதி மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுஜாதா விசாரணை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன்,ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் .

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் 4 பேர் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம். இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆச்சியப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம். மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம். கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர். உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம். மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும். நோட்டமிட்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article