
சென்னை,
இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கதை சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.