
சென்னை,
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து, "வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன், டான், டாக்டர்' போன்ற வெற்றி படங்களில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்' என கூறியுள்ளார்.
சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.