சிவகங்கை,
2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அவர் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில், ரூ.50 லட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைத்தார்.
வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. சிவகங்கை மாவட்டத்தை வளர்த்ததில் தி.மு.க ஆட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு கொடுத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும். திருப்பத்தூரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.