சென்னை,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தனது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
இவர் தற்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், இவர் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி, இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "மன்மதன்" திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு 'மன்மதன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.