மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

3 hours ago 1

திருவனந்தபுரம்,

2024-25-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 14-ந் தேதி புகழ்பெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

நடப்பு சீசனை முன்னிட்டு கடந்த 18-ந் தேதியுடன் நெய்யபிஷேக, களபாபிஷேக வழிபாடுகள் நிறைவடைந்த நிலையில், 19-ந் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இரவு மாளிகப்புரத்து குருதி சமர்ப்பன சடங்குகளுக்கு பின் கோவில் நடை அடைக்கப்பட்டது.

மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவாக நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ராஜ ராஜ வர்மா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது. அதைதொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய சடங்குகளுக்கு பின் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி 18-ம் படி வழியாக இறங்கினார்.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் மட்டும் 53 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு மந்திரி அறிவித்துள்ளார். இதன்மூலம் 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article