![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38135528-police33.webp)
சிவகங்கை,
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைய கவுதமன் உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கியதாக அந்த காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்த பிரணிதா பரபரப்பு புகார் கூறினார். மேலும் தன்னை கத்தி உள்ளிட்டவற்றால் கீறியதாக காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலைவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி மாலை அமராவதி கிராமத்தில் கோவில் நில தகராறு தொடர்பாக இரு பிரிவினர் விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். அதே நேரத்தில் வாகன சோதனையில் இருந்த பெண் சார்பு ஆய்வாளர் பிரணிதா முத்துகிருஷ்ணன் விசாரணையில் தலையிட்டார். இதற்கு விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெண் சார்பு ஆய்வாளருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சார்பு ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையிலும் தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் 10 பேர் தாக்கியதாக கூறி சிகிச்சையில் சேர்ந்தார். தன்னை தாக்கியதாக பெண் சார்பு ஆய்வாளர் பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தி வெளியானது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு விசாரணையில் காவல் நிலையத்தின் சிசிடிவி ஆய்வு செய்யப்பட்டு நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பெண் சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.
மேலும் பிரணிதா மீது பொதுமக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார். கடந்த 18-11-2024 ஆம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக சோமநாதபுரம் காவல் நிலையத்தில் இருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் மாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு பணி அறிக்கை செய்யாமல் 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தவர் தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைவாக பெறப்படும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . பெண் சார்பு ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.