சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வாழையின் விளைச்சல் குறைந்திருப்பதால் செவ்வாழை பழம் ஒன்று ரூ.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம், திருப்பாசேத்தி, மானாமதுரையில் மொத்தமாகவும், சில்லறையிலும் வாழைப்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களும் வரிசை கட்டுவதால் தேவை அதிகரித்துள்ளது. மதுரை சந்தையிலிருந்து வரத்து குறைந்ததாலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் பாதிப்பாலும் இந்த ஆண்டு வாழைப்பழ தார்களின் வரத்து குறைவாக உள்ளது.
இதனால் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் சுமார் 100 பழங்கள் கொண்ட செவ்வாழை தார் ரூ.1400க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் நாட்டுவாழைப்பழ தார் ரூ.350லிருந்து ரூ.900 ஆக விலை உயர்ந்து விற்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். வாழைப்பழம் தேவை அதிகரித்தாலும் அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. விஷேச நாட்களில் வாழைப்பழங்களின் விலை உயர்வதால் மக்கள் தான் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் வாழை விளைச்சல் குறைவு: செவ்வாழை ஒன்று ரூ.25 க்கு விற்பனை appeared first on Dinakaran.