சிவகங்கை மாவட்டத்தில் குறைந்துவரும் கோடை விவசாயம்: மீட்பு நடவடிக்கைக்கு விவசாயிகள் கோரிக்கை

6 hours ago 3

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கோடை(ராபி) விவசாயம் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒருகாலத்தில் பல லட்சம் ஹெக்டேரில் விவசாய பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் நீர் பாசனத்தையே நம்பியுள்ளன. கடந்த ஆண்டு 78 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வரை காரி, ராபி (கோடை விவசாயம்) பருவம் எனப்படும் இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ராபி பருவ விவசாயம் என்பது படிப்படியாக வெகுவாக குறைந்து வருகிறது.

காரிப் பருவத்தில் விவசாயம் செய்யப்படும் நிலங்களில் பாதியளவு கோடை காலத்திலும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், போதிய மழை இன்மை, பெரியாறு, வைகை பாசன பங்கீட்டு நீர் சரிவர கிடைக்காதது என பல்வேறு காரணங்களால் கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் தயங்கும் நிலை உருவானது. பெரியாறு, வைகை பாசன பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு மழை நீரோடு, பாசன நீரும் கிடைக்கும்பட்சத்தில் கண்மாய்கள் நிறைந்து ஒரு போக சாகுபடி முடிந்து, மீண்டும் கோடைகால விவசாயம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கு நீர் வருவதில்லை. பெரும்பாலும் மழையை மட்டும் நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோடை விவசாயம் என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக கோடை விவசாயம் என்பது காரி பருவ விவசாயத்தில் செய்யப்படுவதில் 10 சதவீதத்தை கூட எட்டாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த 10 சதவீமும் ஆழ்குழாய் மூலம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களாகும். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கோடை காலத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் முற்கட்ட பணிகளுக்கு செலவு செய்த பணம் தொடர்ந்து வீணானது. விவசாயம் பாதிப்பிற்கு மழையளவு சரிவை மட்டும் காரணமாக கூற முடியாது. இன்னும் இம்மாவட்டத்தில் அதிக நீர் தேவையுள்ள பயிர்களே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேளாண்மை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன பயிர் செய்தாலும் விளையக்கூடிய செம்மண் பூமியே இம்மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் ஆகும். இதுபோன்ற நிலங்கள் இருந்தும் கோடை கால விவசாயம் என்பது குறைந்து வருகிறது. இது குறித்து வேளாண்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் குறைந்துவரும் கோடை விவசாயம்: மீட்பு நடவடிக்கைக்கு விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article