சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 3 துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர, 17 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட தேவைகளுக்காக இயங்கக்கூடிய சிறு துறைமுகங்களும் உள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையின் தேவைக்காக அந்த துறைமுகத்தில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
உதாரணமாக, திருக்கடையூரில் நாப்தா தொழிற்சாலை உள்ளதால் அங்குள்ள சிறிய துறைமுகத்தில் நாப்தாவை இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல் அனல்மின் நிலைய பணிகளுக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. தரங்கம்பாடியில் செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்துக்காக ஒரு துறைமுகம் செயல்படுகிறது. நாகப்பட்டினத்தில் எண்ணெய் எடுப்பதால் அங்கே ஒரு துறைமுகம் உள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலைய பணிகளுக்காக கொடுத்துள்ளனர். மற்றவை எல்லாம் பொதுவான துறைமுகங்களாக உள்ளன.
இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கூடுதலாக 8 இடங்களில் புதிய சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி முகையூர், பனையூர், மரக்காணம், விழுந்தமாவடி, மணப்பாடு, வானகிரி, சிலம்பிமங்கலம், கன்னியாகுமரி கடற்கரை ஆகிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சிறிய துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் தொழில் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
The post பனையூர், மரக்காணம் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய சிறு துறைமுகங்கள்: முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு appeared first on Dinakaran.