
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.
இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதன் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அனி சாம்பியன் பட்டம் வென்று விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆனாலும், பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்ததற்கு சில கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் சொத்தாக கருதுவதாகவும், தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தும் கம்பீர் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டபோது, எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அது எதிர்பார்த்த வழியில்தான் இருந்தது, இந்திய அணியின் செயல்திறனைப் பார்த்து நீங்கள் ஒவ்வொரு நாளும் மதிப்பிடப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் 8 மாதங்களாக இந்த பணியில் இருக்கிறேன்.
பலன்கள் கிடைக்கவில்லை என்றால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. விமர்சனம் செய்வது மக்களின் வேலை. ஆனால், 25 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருக்கும் சிலர், இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர். இது அவர்களுடைய சொந்த அணி ஒன்றும் கிடையாது. நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், என்னுடைய பயிற்சி, சாதனைகள் மற்றும் என்னுடைய சாம்பியன்ஸ் கோப்பை பரிசுத் தொகை குறித்தும் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நான் என் பணத்தை எங்கே செலவிட்டேன் என்று நான் சொல்லத் தேவையில்லை, நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன், என் கடைசி மூச்சு வரை அப்படியே இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.