சிறைக்குள் செல்போன், கஞ்சா - விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைப்பு

2 weeks ago 2

சென்னை,

கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, சிறைக்குள் திடீரென சோதனை நடத்தியபோது அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் மீது பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புழல் சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்தப்படுவது குறித்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த உளவுப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 30-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Read Entire Article