சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு மத போதகர் முன் ஜாமீன் கோரி மனு: ஐகோர்ட் விரைவில் விசாரணை

1 week ago 3

சென்னை: போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு மே 21ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கோவை மாநகர போலீசார் சார்பில், அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நேற்று முன்தினம் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீதான போக்சோ வழக்கில் தான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தூண்டுதலினால் சிறுமிகளை வைத்து எனக்கெதிராக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். எனக்கு எதிராக உள் நோக்கத்துடம் பொய்யான புகாரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மாட்டேன் என்று கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு மத போதகர் முன் ஜாமீன் கோரி மனு: ஐகோர்ட் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article