
மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருது வெளியேறின. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலன் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை வீரர்கள் படுமோசமாக செயல்பாட்டை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக சென்னை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பல வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு அல்லது தங்கள் அணிகளால் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், ஐ.பி.எல் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் ஏமாற்றம் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து ஐ.பி.எல் மோசடி லெவன் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி இந்த மோசடி லெவன் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியின் தொடக்க வீரர்களாக சி.எஸ்.கே அணியின் ராகுல் திரிபாதி மற்றும் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளனர். 3-ம் வரிசையில் ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். 4-ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
5-ம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வெங்கடேஷ் ஐயர் தேர்வாகியுள்ளார். 6-ம் வரிசையில் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். மீதமுள்ள பந்துவீச்சாளர்களாக / ஆல்ரவுண்டர்களாக லியாம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், மதீஷா பதிரனா, மற்றும் முகமது ஷ்மி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இம்பேக்ட் வீரராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்த ஐ.பி.எல். தொடரின் மோசடி லெவன்:
ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், மதீஷா பதிரனா, முகமது ஷமி.
இம்பேக்ட் வீரட்; முகேஷ் குமார்.