சிறுமி பலாத்கார வழக்குகளை போன்று பெண்களை கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை: மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு

8 hours ago 2

போபால்: சிறுமி பலாத்கார வழக்குகளை போன்று பெண்களை கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்வில், அம்மாநில பாஜக மூத்த தலைவரும் முதல்வருமான மோகன் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியது.

அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எங்களது அரசு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பெண் குழந்தைகளை கட்டாய மதம் மாற்றம் செய்யும் நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் சட்டம் மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்படும். சட்டவிரோத மத மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற ஒழுக்கக்கேடுகள் மற்றும் தீய செயல்களை கடுமையாகக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது நமது பெண்களை கட்டாய மதம் மாற்றுபவர்களுக்கும் மரண தண்டனையை அறிமுகப்படுத்தப்படும்’ என்று கூறினார். மத மாற்றம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்து இருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

The post சிறுமி பலாத்கார வழக்குகளை போன்று பெண்களை கட்டாய மத மாற்றம் செய்தால் மரண தண்டனை: மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article