ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தோல்வி பயத்தில் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கிய நிலையில், சிறந்த நிர்வாகத்திறனும், வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி திமுக களம் இறங்கியிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் சிறந்த நிர்வாகத்திறன் இல்லாமை, பாஜ போன்ற மதவாத சக்திகளுடன் உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் மத்தியில் நிலவி வரும் கோஷ்டி பூசல் உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாடு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிமுக செல்வாக்கை இழந்து வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அதிமுக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணித்தது. குறிப்பாக, ஈரோட்டில் அதிமுகவினரிடையே கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருப்பதாலும், அவர்கள் தேர்தல் பணியாற்ற விருப்பம் இல்லாததாலும், இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அக்கட்சி புறக்கணித்திருப்பதாக கூறப்பட்டது. இதேபோன்று, பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும், தோல்வி பயத்தில், தேர்தல் களத்தில் இருந்து விலகி இருக்கிறது. அதிமுக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு காரணங்களை கூறினாலும், தமிழ்நாடு அரசின் சிறந்த நிர்வாகத்திறனும், திட்டங்களுமே, அக்கட்சிகள் தேர்தலில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாகும்.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: கலைஞர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத்திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், காலநிலை பருவமாற்றம் போன்ற சுற்றுச்சூழல்களிலும் தமிழ்நாடு அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் இத்தகைய திட்டங்கள் தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, மதவாத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களை காக்கும் அரணாக திமுக அரசு விளங்குகிறது. அதே நேரத்தில், அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் இழந்து வருகிறது.
இதற்கு, சட்டமன்ற தேர்தல, மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் சரிவே சான்றாகும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பின்வாங்கிய அதிமுக, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்தும் பின் வாங்கியுள்ளது. அதேபோன்றுதான், பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்திறன், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித்திட்டங்களை முன்னிறுத்தி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக களம் இறங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரமும், திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு பெரும் காரணமாக இருக்கப்போகிறது. இவ்வாறு திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post சிறந்த ஆட்சி நிர்வாகத்தால் பின் வாங்கிய கட்சிகள்: செல்வாக்கை இழந்த அதிமுக, பாஜ.! ஈரோடு தேர்தலில் பாமக, தமாகா ‘கப் சிப்’ appeared first on Dinakaran.