சிராஜ் முன் வரிசையில் களமிறக்கம்.. ரோகித் முடிவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்

2 months ago 13

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கில் 31 ரன்களுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது நைட் வாட்ச்மேனாக (விக்கெட் தடுப்பாளர்) முகமது சிராஜை களமிறக்கியது. ஆனால் அவரோ அஜாஸ் படேல் வீசிய முதல் பந்தலேயே கோல்டன் டக் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் அந்த இடத்தில் சிராஜுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டன் ரோகித் சர்மா அனுப்பியிருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் போன்றவரை அவர்கள் அனுப்பியிருக்க வேண்டும். அவரை நீங்கள் நைட் வாட்ச்மேன் என்று அழைக்க முடியாது. அவர் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் திறன் கொண்டவர்" என்று கூறினார்.

அதே போல முன்னாள் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு: "அந்த சூழ்நிலையை சமாளிக்க ஒரு பவுலர் வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அங்கே ஒரு முழு நேர பேட்ஸ்மேனை வைத்து இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும். அஸ்வின் செய்வார் என்பதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதை இந்திய அணி செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article