
ஐதராபாத்,
18-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டிராவிஸ் ஹெட் 8 ரன்களிலும், அபிஷேக் சர்மா 18 ரன்களிலும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 17 ரன்களில் அவுட்டானார்.
இதன் பின் ஜோடி சேர்ந்து அணிக்கு வலு சேர்த்த நிதிஷ் ரெட்டி - கிளாசென் இணை 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. கிளாசென் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே நிதிஷ் ரெட்டியும் 31 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடிக்கு பெயர் போன ஐதராபாத் அணி இந்த சீசனில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அதனை இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
இறுதி கட்டத்தில் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் (9 பந்துகள்) அடித்தார். இதன் மூலம் ஐதராபாத் ஒரளவு நல்ல நிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்துள்ளது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.