
சென்னை,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மற்றும் நாளை காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார்.
அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ப.சிதம்பரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை நலமுடன் உள்ளதாகவும் டாக்டர்கள் அவரை பரிசோதித்துவருவதாகவும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.