சிம்பொனி இசை மட்டுமல்ல; இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை: பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து!

5 hours ago 1

சென்னை: சிம்பொனி இசை மட்டுமல்ல; இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

சிம்பொனி இசை மட்டுமல்ல….
இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை!

வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் படைத்து, அவற்றை நமது மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் மருந்தாகக் கொடுத்தவர் அவர். இசையின் உச்சத்தை என்றோ அவர் தொட்டுவிட்டதாக நாமெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இசை மருத்துவர் தமது இசை வாழ்வின் புதிய உச்சங்களைத் தேடித் தேடிச் சென்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.

அடிப்படையில் இளையராஜா இசையமைப்பாளர் அல்ல. அவர் இசையை இயற்றுபவர். இசையில் ஆய்வுகளையும், புதிய புதிய தேடல்களையும் நிகழ்த்துபவர்களின் இலக்கு சிம்பொனி இசைக்கோர்வையை படைப்பது தான். சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.

எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், ஃபீலிக்ஸ் மெண்டல்சன் உள்ளிட்டோரின் வரிசையில் அவரும் இடம் பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல…. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.

இலண்டன் செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா அவர்கள், “சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று பெருமிதத்துடன் கூறினார். உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல… இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் இளையராஜா!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சிம்பொனி இசை மட்டுமல்ல; இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை: பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article