எதுவும் வேஸ்ட் இல்லை!

3 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

“தையல்காரர்கள் உடைகளை தைத்த பிறகு மீதமாகிற துணிகளை என்ன செய்வார்கள்? என்ற கேள்விதான் எனக்கு பிசினஸ் ஐடியாவை கொடுத்தது” என்கிறார் நம்ருதா. ஒரு பொருளை தயாரிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் உபரிகளை வீணாக்காமல் அதனை மீண்டும் ஒரு உபயோகமான பொருளாக மாற்றுவதில் இன்று பலரும் ஈடுபடுகின்றனர். அதில் உடைகளை தைக்கும் போது மீதமாகும் துணிகளை குப்பையில் போடுவதை தடுத்து அவற்றை சேகரித்து அழகான கைப்பைகளை தயாரித்து ‘அப்சைக்லி’ என்ற நிறுவனம் மூலமாக விற்பனை செய்து வருகிறார் நம்ருதா.

“கொரோனா காலத்தில் என் பாட்டி அவருக்காக புது நைட்டி வாங்கினாங்க. ஆனால் அவங்களுக்கு அளவு சரியா இல்லைன்னு ஆல்டர் செய்தாங்க. அதில் நிறைய துணி மீதமானது. அந்த துணிகளை வைத்து அவரே முகக்கவசங்களை தைத்து எங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொடுத்தார். பாட்டியின் அந்த செயல்தான் என்னை சிந்திக்க வைத்தது. பாட்டியின் நைட்டி துணி போல் தையல்காரர்களிடமும் நிறைய துணிகள் மீறும். அவர்கள் அதை என்ன செய்வார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. தெரிந்து கொள்ள அக்கம்பக்கத்தில் உள்ள தையல்காரர்களிடம் விசாரித்தேன். சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் கேட்ட போது எல்லோரும் மீதமாகும் துணிகளை குப்பைகளில் போடுவதாகவும் சிலர் கொளுத்தி விடுவதாகவும் சொன்னார்கள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், சிறிது அளவிலான துணியை வைத்து பாட்டி முகக்கவசம் தைக்கும்போது, இந்த துணிகளை வைத்து நாமும் ஏதேனும் செய்யலாமே என்ற எண்ணம் வந்தது. ஏற்கனவே ஏதேனும் தொழிலினை தொடங்க வேண்டும் என்றிருந்த நான் இந்த முயற்சியினை கையில் எடுத்தேன். முதலில் டெய்லர்களிடம் சென்று மீதமான துணிகளை சேகரிக்க முடிவு செய்தேன். எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு டெய்லர் அண்ணாவிடம் மீதமாகும் துணிகளை குப்பைகளில் போடாம ஒரு டப்பாவில் போடச் சொல்லி டப்பாவையும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். சில நாட்கள் கழித்து பெட்டியை எடுத்து வந்தேன். அதில் பல வண்ணமயமான துணிகள் இருந்தது. என்ன செய்யலாம்னு யோசித்த போது என் தாத்தாவிற்கு தெரிந்த தையல் தொழிலாளர்கள் இருக்காங்க.

அவர்களிடம் அந்த துணிகளை எல்லாம் கொடுத்து எல்லாவற்றையும் ஒன்றிணைச்சு துண்டு வேலைப்பாடு (patch work) மாதிரி தைத்து கொடுக்க சொல்லி முன்பணமும் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் அவர்கள் தைக்க முடியாது என்று சொல்லி நான் கொடுத்த முன்பணத்தையும் என்னிடம் திருப்பி தந்துவிட்டார்கள். முதல் முயற்சியே இப்படியாகிவிட்டதே என யோசித்துக் கொண்டிருந்தபோது, என் தாத்தா வேறு ஒரு யோசனை சொன்னார். “பல பெண்கள் வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்காங்க. அவங்களை வைத்து தைக்க சொல்லலாம்’’ என்றார். டெய்லரிங் தெரிந்த ஒரு அக்காவை சந்தித்தேன். அவரிடம் தைக்க கொடுத்தேன். அவரும் துணிகளை அழகாக தைத்து கொடுத்தார். அதில் என்ன செய்யலாம்னு யோசித்த போது, செல்லப் பிராணிகளுக்கு அழகான படுக்கையை உருவாக்கினேன். அதை இன்ஸ்டாவில் பதிவிட்டபோது, ஒரு தொண்டு நிறுவனம் எங்களை அணுகினார்கள். அவர்கள் மூலமாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு படுக்கைகளை தயாரித்து கொடுத்தோம்.

எனக்கும் டெய்லரிங் தெரியும். பள்ளிப்படிப்பிற்கு பிறகு அம்மா டெய்லரிங் கற்றுக்கொள்ள சொன்னாங்க. அதுதான் இப்போது எனக்கு உதவி வருகிறது. அக்கா தயாரித்து கொடுக்கும் பேட்ச் வொர்க்கை வைத்து கைப்ைப ஒன்றை தைத்தேன். நன்றாக வந்தது. ஆனால் அதை சந்தைப்படுத்தும் வகையில் நேர்த்தியாக தயாரிக்கணும் என்பதால், பேக் தயார் செய்வதற்கான முறையான பயிற்சியினை எடுத்துக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதை அக்காக்கும் கற்றுக் கொடுத்தேன். துண்டு துணிகளைக் கொண்டு செய்யப்பட்டது என்பதே தெரியாத அளவிற்கு அழகாக இருந்தது. இதையும் இணையத்தில் பதிவிட்ட போது, ராஜஸ்தானில் இருந்து ஒரு லேப்டாப் பேக் ஆர்டர் வந்தது.

அதன் பிறகு வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப பேக் வகைகளை தயார் செய்கிறோம். பேக் பேக், லேப்டாப் பேக், பொருட்களை வைத்துக் கொள்வதற்காக உறைகள் போன்ற பல்வேறு பேக் வகைகளை தயாரிக்கிறோம். கைகளால் துவைத்துக் கொள்ளலாம். மேலும், இவை மெஷின் வாஷ் பரிசோதனையும் செய்யப்பட்டது. காரணம், எல்லா வகையான துணிகளையும் சேர்த்து தைப்பதால் அவற்றில் சில துணிகள் சுருங்கும், சிலது சாயம் போகும் என்பதால் நாங்க தரம் மற்றும் டிசைன்களில் அதிக கவனம் செலுத்துகிறோம்’’ என்றவர், இதனை எல்லோருக்கும் பயனுள்ள தொழிலாக மாற்றியது குறித்து விளக்குகிறார்.

“நான் MBA பட்டதாரி. கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 வருடம் வேலை செய்திருக்கிறேன். தொழில் தொடங்கிய பிறகு அதை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்று முயற்சியில் இறங்கணும். தொழில் மட்டுமில்லாமல் எண்ணம் இருந்தால், நிச்சயம் அதனை மேம்படுத்தும் முயற்சிகளையும் எடுக்க வேண்டும். தொழில் மட்டுமில்லாமல் எனக்காக வேலை செய்யும் பெண்களின் வாழ்வாதாரமும் மேம்பட வேண்டும். அதனால் மிகவும் கவனமாக செயல்பட்டேன். ஆர்டர்கள் வரத்தொடங்கியதும் மேலும் சில பெண்களை வேலைக்கு நியமித்தேன். இப்போது 32 பெண்கள் என்னுடன் இணைந்து வேலை செய்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் டிசைனர்கள் மூலம் கலர் தியரி, டிசைன்கள் குறித்த பயிற்சி கொடுத்தேன். ஆனால் டிசைனர்கள் ஒரு சில விதிமுறைகளைதான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். சில வண்ணங்கள் மட்டும்தான் இணைக்க வேண்டும் என்றார்கள். அது அக்காக்களின் தன்னம்பிக்கையை குலைப்பது போல இருந்தது. மேலும் அவர்களின் விதிமுறைகளை என்னுடைய தொழிலில் நடைமுறைப்படுத்த முடியாது. காரணம், நாங்க ஒரு குறிப்பிட்ட துணிகளை மட்டுமே பயன்படுத்துவதில்லை. பல்வேறு இடங்களில் இருந்து பல வகையான துணிகளை சேகரிக்கிறோம். ஒன்றுபோல் மற்றொன்று இருக்காது. அதனால் அக்காக்களின் விருப்பப்படியே டிசைனிங் வேலைகளை விட்டுவிட்டேன். அவர்களும் அழகான பொருட்களை எனக்கு படைத்துக் கொடுத்தார்கள். நிறைய ஐடியாக்களும் தருவார்கள்.

உந்துதலுடன் வேலை செய்கிறார்கள். எங்க தயாரிப்பு பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. காரணம், ஒரே பேக் போல மற்றொன்றை எங்களால் உருவாக்க முடியாது. ஒவ்வொருமுறையும் ஒரு புது டிசைன் கிடைக்கும். இந்த தனித்துவம்தான் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என நினைக்கிறேன்.சில சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரே நிறங்களின் கோர்வையில் பேக்கினை கேட்பார்கள். அது சிரமம் என்பதை புரிய வைப்பேன். காரணம், எங்க தொழிலின் அடிப்படையே பயனற்ற துணிகளை வீண் செய்யாமல் தைப்பதுதான். இதில் ஒரே மாதிரி நாங்க நினைத்தாலும் தைக்க முடியாது. ஒரே வண்ணங்களின் காம்பினேஷன் தர முடியாது என்றாலும் டிசைன்களிலும் வகைகளிலும் ஒரே மாதிரி மேட்ச் செய்ய முடியும். இந்த தனித்துவத்தை உணர்ந்தவர்கள்தான் எங்களின் வாடிக்கையாளர்கள். சில சமயங்களில் வாடிக்கையாளர்களே எங்களுக்கு ஐடியா தருவார்கள்.

ஒருமுறை இறந்த தன் அப்பாவின் துணிகளை இணைத்து இது போன்று தயாரித்து தரும்படி வாடிக்கையாளர் ஒருவர் கேட்டார். எங்க டீமில் உள்ள அக்கா கொஞ்சமும் தயங்காமல் அதை நேர்த்தியாக வடிவமைத்து ஒரு போர்வையாக தயாரித்து கொடுத்தார். அதன்பின்னர்தான் நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் ஐடியாவும் எங்களுக்கு கிடைத்தது. சிலர் குழந்தைகளின் சிறுவயது துணிகளை நினைவுப்பொருளாக தைத்து தரும்படி கேட்பார்கள். அவற்றையும் செய்தோம். அவர்கள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கும் போது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தத் தொழில் மூலம் நிறைய பெண்களுக்கு வாழ்வாதாரம் மேம்படுகிறது என்பதே சந்தோஷமாக இருக்கிறது. வேலையில்லாமல் திண்டாடும் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சிகளை அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். முயற்சிக்காமல் இருப்பதை விட முயற்சித்து தோற்றாலும் பரவாயில்லை” என்கிறார் நம்ருதா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post எதுவும் வேஸ்ட் இல்லை! appeared first on Dinakaran.

Read Entire Article