தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6.3.2025) திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். திருவாருர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 11,336 குழுக்கள் மற்றும் நகர்புற பகுதியில் 2,113 குழுக்கள் என மொத்தம் 13,449 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 156 மாற்றுத்திறனாளி குழுக்களும், 116 முதியோர் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. 2021 முதல் இன்றுவரை 6,140 குழுக்களுக்கு ரூ.9.21 கோடி சுழல் நிதியும், 4,279 குழுக்களுக்கு ரூ.25.06 கோடி சமுதாய முதலீட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆண்டில் இதுவரை ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் 6,439 குழுக்களுக்கு ரூ.484.99 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாவட்டங்கள் தோறும் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாருர் வட்டாரத்திற்குட்பட்ட பழவனக்குடி ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் மகளிர் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார ரீதியாக தனித்து இயங்கவும், சுயமரியாதையுடன் வாழவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் 1989-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக் குழு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, அவர்களுக்கு (skilled based programming) திறன் பயிற்சி அளிப்பது, சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது என நம்முடைய இன்றைய முதலமைச்சர் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது, பல்வேறு முன்னேற்றங்களை அந்தத் துறையில் செயல்படுத்தி, அதனடிப்படையில் தற்போது கிராமப்புறங்களில் 3.30 இலட்சம் குழுக்களும், நகர்ப்புறத்தில் 1.50 இலட்சம் குழுக்களும், என மொத்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் தற்போது நடைமுறையில் (active) இருக்கிறார்கள். இக்குழுக்களில் 54 இலட்சம் மகளிர் உறுப்பினர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடன் இணைப்பாக நாங்கள் பெற்றுத் தந்துள்ளோம். வருகின்ற 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று சென்னையில், நம்முடைய முதலமைச்சர் மூவாயிரத்து 19 கோடி ரூபாய் கடன் இணைப்புகளை வழங்கவுள்ளார்கள்.
இப்படி வழங்கப்படுகின்ற அந்த கடன்களை எந்த அளவுக்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்; அதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். மாவட்ட வாரியாக செல்கின்றபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தும்போது, ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகள் வருகிறார்கள். வங்கி இணைப்புக் கடன்கள் கோடிக்கணக்கில் வழங்குகிறோம். ஆனால் இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு, கிராமத்திற்கு, ஊராட்சிக்கு செல்லும்போது அங்கு செயல்படக்கூடிய சுயஉதவிக் குழுவில் உள்ள சகோதரிகளை அழைத்து, என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்; என்னென்ன திறன் பயிற்சி எதிர்பார்க்கிறார்கள்; என்னென்ன வசதிகள் கேட்கிறார்கள். செயல்பட்டுக் கொண்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏன் செயல்படாமல் உள்ளது. அந்த குழுக்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்துவது. அவர்களை எப்படி ஊக்குவிப்பது; அவர்களுடைய பிரச்சனைகள் என்னவென்று கேட்கச் சொன்னார்கள்.
அதனுடைய ஒரு முன்னோட்டமாக தான் இன்றைக்கு முதன்முறையாக ஊராட்சி அளவில் இயங்கக்கூடிய குழுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பணியை திருவாரூரில் இருந்து துவங்கியிருக்கின்றோம். இந்த குழுக்களை துவக்கிய கலைஞர் அவர்களது சொந்த ஊரில் இருந்து ஆய்வைத் துவங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை. இன்றைக்கு திருவாரூர் மாவட்டம் பழவனங்குடி ஊராட்சியில் உள்ள 30 குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை சந்தித்துப் பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அவர்களுடைய குடும்பச் சூழல், அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய கோரிக்கைகள், அவர்களால் செயல்படுத்த படுகின்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் இதுபோன்ற அரசின் பல்வேறு திட்டங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றது. இதையெல்லாம் நாங்கள் கேட்டறிந்தோம். அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதையும், அந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை எல்லாம் கேட்டறிந்தோம்.
இந்த கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சகோதரிகளும் மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, இந்த பழவனங்குடியில் உள்ள பல பிரச்சனைகளை பற்றிய கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். பாசன வாய்க்கால்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பஸ் வசதி, தூர்வாருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் எங்களிடம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி அதற்கான உரிய நடவடிக்கைகளை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். திராவிட மாடல் அரசு அமைவதற்கு காரணமாக இருந்த மகளிரை ஊராட்சி அளவில் சந்தித்துப் பேசியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
The post மகளிர் குழுக்களுக்கு இதுவரை ரூ.1.05 லட்சம் கோடி கடன்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.