சென்னை,
தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் கடந்த 13-ந் தேதி வெளியான படம் "தென் சென்னை". அறிமுக இயக்குனர் ரங்க நாதன் இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார். "டாடா" திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், 'தென் சென்னை' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
இந்திய கப்பல் படை அதிகாரி பயிற்சி முடித்த ரங்கா பணியில் சேராமல் சென்னை வந்து தனது தந்தையும் தாய்மாமாவும் நடத்திய ஓட்டலை கவனித்துக் கொள்கிறார். அந்த ஓட்டலை செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் வில்லன் குத்தகைக்கு எடுத்து இருப்பதையும் அதை குடும்பத்தினரால் மீட்க முடியாமல் தவிப்பதையும் அறிகிறார்.
ஓட்டலை மீண்டும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்குகிறார். இன்னொரு புறம் ஓட்டலை குத்தகைக்கு எடுத்த வில்லன் அங்கு சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகிறான். தில்லு முல்லு மற்றும் பண மோசடிகளிலும் இறங்குகிறான். வில்லன் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன? ஓட்டலை ரங்காவால் மீட்க முடிந்ததா? என்பது மீதி கதை..
நாயகனாக வரும் ரங்கா ஓட்டல் பறிபோன விரக்தி, அதற்கு காரணமானவர்கள் மீது கோபம் என்று உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார். மருத்துவராக வரும் நாயகி ரியா, அழகிலும் நடிப்பிலும் அசத்தி உள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியாகவும் செக்யூரிட்டி ஏஜென்ஸி நடத்துபவராகவும் வரும் நிதின் மேத்தா ஸ்டைல் வில்லனாக மிரட்டல் நடிப்பை வழங்கி உள்ளார்.
இளங்கோ குமரன், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர். கதை நிகழும் இடங்களை கண்முன் நிறுத்துகிறது சரத்குமார் கேமரா.
முதல் பாதி திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருப்பதை தவிர்த்து இருக்கலாம். படத்தின் பிற்பகுதி வேகம் இருந்தது. சிவா பத்மயன் மற்றும் ஜென் மார்டினின் இசை படத்திற்கு பலம். பூர்வீக இடத்தை மீட்கும் மையக் கருவை வைத்து வித்தியாசமான களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ரங்க நாதன்.