
சென்னை,
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற 'ஏஸ்' திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.ருக்மிணி வசந்த் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. படத்தின் புரோமோஷன் பணிகளில் விஜய் சேதுபதி தற்போது ஈடுபட்டு வருகிறார் .
தமிழ் சினிமாவில் நட்பு, மரியாதை, உறவுகள் என அனைத்திற்கும் அடையாளமாக திகழ்கின்ற நடிகர்கள் சிலர் மட்டுமே காணப்படுகின்றனர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஷாலும் விஜய் சேதுபதியும் சந்தித்திருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார் விஷால். அந்த பதிவில் அவர், "சென்னை விமான நிலையத்தில் என் அன்பு நண்பர், நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்தேன். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் அவரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தாலும், அவருடன் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உனது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.