டெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ஆட்சேபனைக்குரிய விதிகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1960ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே உள்ளன. அதை தொடர்ந்து பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தொடர்ந்து 4 நாட்கள் நடந்த மோதலை அடுத்து மே 10ம் தேதி பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நீர்வள அமைச்சக செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் நீர்வள செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ஆட்சேபனைக்குரிய விதிகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக 2023ம் ஆண்டு ஜனவரியிலும், 2024ம் ஆண்டு செப்டம்பரிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விதிமுறை குறித்து விவாதிக்க இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சிந்து நதிநீர் ஒப்பந்தம்: விதிகள் குறித்து விவாதிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு appeared first on Dinakaran.