சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜீலம் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் அவசர நிலை பிரகடனம்: பாகிஸ்தான் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவிப்பால் மக்கள் பீதி

10 hours ago 3

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜீலம் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் பாகிஸ்தானின் உள்ளூர் நிர்வாகம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக பாய்ந்தோடும் சிந்து நதியின் நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்தது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த மூன்று ஆறுகளின் நீரை முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலக வங்கியின் மத்தியஸ்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு கிழக்கு ஆறுகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆறுகளின் நீர் மீது சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றின் சராசரி ஆண்டு பாய்வு சுமார் 33 மில்லியன் ஏக்கர் அடியாகும். மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம், சினாப் ஆறுகளின் நீர் பெருமளவு பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இவற்றின் சராசரி ஆண்டு பாசன பாய்வு சுமார் 135 மில்லியன் ஏக்கர் அடி ஆகும். தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதால், சிந்து, ஜீலம், சினாப் ஆறுகளின் நீரை பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் இருந்து ஒரு துளி நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதை உறுதி செய்வோம்’ என்றார். இதற்கிடையில், இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கோபமடைந்துள்ளது.

சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் செனட் ஒரு தீர்மானத்தில், இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் நடவடிக்கைக்கு சமமானது என்று கூறியுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் மத்தியில் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியா மீது பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானின் ‘டான் நியூஸ்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, பாகிஸ்தானின் முசாபராபாத் மாவட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் வெள்ள நிலைமைகள் தீவிரமாக உருவாகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் நீர் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

மேலும் மற்றொரு பாகிஸ்தான் ஊடகமான ‘டுனியா நியூஸின்’ அறிக்கையின்படி, ‘பாகிஸ்தானுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி ஜீலம் ஆற்றின் நீரை இந்தியா விடுவித்ததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உள்ளூர் நிர்வாகம் ஹட்டியன் பாலா பகுதியில் அவசர நிலையை அமல்படுத்தி, மக்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. ஜீலம் நதி நீர் இந்தியாவின் அனந்தநாக் மாவட்டம் வழியாக பாகிஸ்தானின் சகோதி பகுதி வழியாக பாய்ந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது.

The post சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜீலம் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் அவசர நிலை பிரகடனம்: பாகிஸ்தான் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவிப்பால் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article