தெற்கு திட்டங்குளத்தில் புதிய தேவாலயம் அடிக்கல் நாட்டு விழா: சிறுபான்மையின மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு பாதுகாவலாக இருக்கும்

6 hours ago 2

கோவில்பட்டி, ஏப்.28: என்றைக்கும் திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக இருக்கும் என்று கோவில்பட்டியில் நடைபெற்ற புதிய தேவாலய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் தனியார் தினசரி சந்தை முன்பு சத்திய முழக்கம் சபை சார்பில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று புதிய தேவாலய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்து பேசியதாவது,
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சிறுபான்மையினர் மக்களை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். .அப்போது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சொந்த இடம் வைத்திருந்தாலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் தேவாலயம், மசூதிகள் கட்டுவதற்கு தடையின்மைச் சான்று கொடுக்கப்படுவதில்லை, அனுமதி கொடுத்தாலும் கட்ட விடுவதில்லை என்று இப்படி ஒரு நெருக்கடி இருப்பதாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் சிறப்பு ஆணை வெளியிட்டு காலதாமதம் செய்யாமல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. மதங்கள் பொதுவாக நமக்கு ஒழுக்கத்தை, நற்போதனைகளை போதிக்கிறது. மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்கிறது. கல்விக்கூடங்கள், ஆலயங்கள் நிர்வகிக்கவும், மருத்துவமனை நடத்தவும் சிறுபான்மையின மக்களுக்கு சிறப்பு அனுமதியை டாக்டர் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கியுள்ள ஒரு உரிமை. அதை கருத்தில் கொண்டு தான் திமுக எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலாக இருக்கும் என்ற கொள்கை உள்ளது.

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை இதை கடைப்பிடித்து வருகின்றனர். என்றைக்கும் திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சந்தானம், மாநில விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அமலிபிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், பாதிரியார்கள் கார்த்தி சி.கமாலியேல், பிரவீன் ராஜ்குமார், அன்புராஜன், சாமிதுரை, ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post தெற்கு திட்டங்குளத்தில் புதிய தேவாலயம் அடிக்கல் நாட்டு விழா: சிறுபான்மையின மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு பாதுகாவலாக இருக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article