புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முதலில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வௌியாகி வருகின்றன. இந்நிலையில் சிந்து நதி ஒப்பந்தமே ஒரு வரலாற்று தவறு என ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சவுகான் கூறுகையில், “1960ம் ஆண்டு சிந்து நதி நீர் விவகாரத்தில் ஒரு தவறு நடந்துள்ளது. அதுதான் பாகிஸ்தானுடன் செய்து கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் காரணமாக சிந்து, ஜெனாப், ஜீலம் உள்ளிட்ட இந்திய நதிகளின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு சென்றது துரதிருஷ்டவசமானது.
தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது நிறுத்தப்பட்டதன் மூலம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலபிரதேசம் போன்ற எல்லையோர மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகள் அதிக பாசன நீரை பெற முடியும். இது நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முடிவு.
இனி ஒவ்வொரு சொட்டு நீரையும் நமது விவசாயிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்களை ஒன்றிய அரசு வகுக்கும்” என்றார்.
The post சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு வரலாற்று தவறு: ஒன்றிய அமைச்சர் சவுகான் பேட்டி appeared first on Dinakaran.