கராச்சி: சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அணு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் கொக்கரிப்புடன் கூறினார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் தலைவர்கள் அவ்வப்போது அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை இந்தியா தாக்கினாலோ அல்லது சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினாலோ, வழக்கமான ஆயுதங்களால் மட்டுமின்றி அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்கள் குறித்து எங்களுக்கு வலுவான தகவல்கள் கிடைத்துள்ளன. எங்களுக்கு கசிந்த ஆவணங்களில், பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்கும் திட்டங்களை இந்தியா வைத்துள்ளதாக தெரிகிறது. அதுபோன்ற தாக்குதல் எந்த நேரத்திலும் நடக்கவாய்ப்புள்ளது.
கீழ்நோக்கி ஓடும் சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அல்லது அந்த நதி நீரை மாற்று வழியில் திருப்பிவிட்டால், அதுபோன்ற செயல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும். அப்போது நாங்கள் முழு பலத்துடன் பதிலளிப்போம். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் என்பதால், பதற்றத்தைக் குறைப்பது மிகவும் முக்கியம். பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் விசாரணை குழுவில் இடம் பெற வேண்டும்’ என்று கூறினார்.
The post சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அணு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்: ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் கொக்கரிப்பு appeared first on Dinakaran.