மும்பை: சைப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் நேற்று சட்டீஸ்கர் ரயில் நிலையத்தில் ஒருவர் பிடிப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மும்பையில் உண்மை குற்றவாளி முகமது அலியை மும்பை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கரீனா கபூர், ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில், சைப் அலிகான் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சைப் அலிகான் உள்ளார். இன்னும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
சைப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள மும்பை காவல்துறையினர், அவரை கத்தியால் குத்திய நபரை பிடிக்க 35 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ேநற்று தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா (31) என்பவர் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் ஜானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது கைது செய்யப்பட்டார். முன்னதாக சட்டீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் இரு போலீஸ் படைகள் தயார் நிலையில் இருந்தது.
ஜானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியாவை போலீசார் கைது செய்தனர். குற்றவாளியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மும்பை காவல்துறையினர் ராய்ப்பூர் விரைந்தனர். அவர்களிடம் சட்டீஸ்கர் போலீசார், குற்றவாளியை ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் தலைமையிலான 35 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் சைப் அலிகானை தாக்கிய குற்றவாளியை தேடிவந்தனர். சட்டீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா என்பவர் குறித்து விசாரித்த போது, அவர் உண்மையான குற்றவாளி அல்ல என்பது உறுதியானது. ஆனால் மற்றொரு தனிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில், மும்பையை ஒட்டிய தானேவின் காசர்வாடவ்லி பகுதியில் அமைந்துள்ள ஹிரானந்தனி தோட்டத்தின் பின்னால் பதுங்கியிருந்த குற்றவாளியை இன்று அதிகாலை மும்பை காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட குற்றவாளியே சைப் அலிகானைத் தாக்கியவர் என்பது உறுதியானது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் முகமது அலியான் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, இப்பகுதி ஓட்டலில் வெயிட்டராக வேலை செய்து வந்துள்ளார். அங்குள்ள தொழிலாளர்களுடன் தங்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முதலில் தனது பெயர் விஜய் தாஸ் என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த பெயர் உண்மையில்லை என்பது உறுதியானது. தானேவில் உள்ள ரிக்கி’ஸ் பாரில் வெயிட்டர் பணியாளராக பணிபுரிந்தார். தான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் ஏற்கனவே தச்சர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார். நேற்று ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் இருவரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல; ஆனால் தற்போது உண்மையான குற்றவாளி முகமது அலியான் கைது செய்யப்பட்டுள்ளார். லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைப் அலிகான், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். முன்னதாக தாக்குதலுக்கு ஆளான சைப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் பஜன் சிங் ராணாவிடம் பாந்த்ரா காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சைப் அலிகானின் மனைவியான நடிகை கரீனா கபூரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அவர் தனது குழந்தைகளான தைமூர், ஜே மற்றும் அவரது பணியாளரை 12வது மாடிக்கு அனுப்பியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர் தனது வீட்டில் இருந்து எதையும் திருடவில்லை என்று கரீனா கபூர் கூறினார். ஆனால் அந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், சைப் கான் அவரை பிடித்த போது அந்த நபர் மீண்டும் மீண்டும் ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறினார். தாக்குதலுக்குப் பிறகு, கரீனா கபூர் தனது சகோதரியான கரிஷ்மா கபூரை தனது வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டதாகவும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கைதான குற்றவாளி முகமது அலியானின் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது. அவர் இந்தியரா? அல்லது வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய நபரா? என்பது குறித்தும் மேற்குவங்கம் மற்றும் ஒன்றிய உளவு துறையிடம் தகவல்கள் பரிமாறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைதான முகமது அலியானை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவவில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’ என்றனர்.
என்கவுன்டர்
ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் தலைமையிலான 35 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் சைப் அலிகானை தாக்கிய குற்றவாளியை தேடிவந்தனர். சட்டீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா என்பவர் குறித்து விசாரித்த போது, அவர் உண்மையான குற்றவாளி அல்ல என்பது உறுதியானது.
மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைப் அலிகான், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். முன்னதாக தாக்குதலுக்கு ஆளான சைப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் பஜன் சிங் ராணாவிடம் பாந்த்ரா காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
The post நேற்று சட்டீஸ்கர் ரயில் நிலையத்தில் சிக்கிய நபர் விடுவிப்பு; சைப் அலிகானை கத்தியால் குத்திய உண்மை குற்றவாளி கைது appeared first on Dinakaran.