?சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இவைகள் எதனால் ஏற்படுகின்றன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரஹங்கள் நீள்வட்டப் பாதையில் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். குரு என்ற பெயரில் அழைக்கப்படும் வியாழன் என்கிற கிரஹம், சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டு காலமும், சனி என்கிற கிரஹம் சூரியனைச் சுற்றி வர 30 ஆண்டுகளும் எடுத்துக்கொள்கிறது. இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் எந்த மண்டலத்திற்கு நேராக ஒரு கிரஹம் வருகிறதோ அந்த கிரஹத்தின் பெயர்ச்சி நடைபெறுவதாகக் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் சராசரியாக குருப்பெயர்ச்சி என்பது ஒரு வருடத்திற்கு ஒரு முறையும், சனிப் பெயர்ச்சி என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சம்பவிக்கிறது.
?அறுபத்து மூன்று நாயன்மார்களோடு சிவத்தொண்டர்கள் வரலாறு நின்றுவிட்டதா? ஏன் அந்த பட்டியல் நீளவில்லை?
– ஆர். உமாகாயத்ரி.
சிவத்தொண்டர்கள் இன்றளவும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அறுபத்துமூன்று நாயன்மார்கள் பற்றிய கதைகளை நாம் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரியபுராணம் என்னும் நூலின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். சேக்கிழார் பெருமான் இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் வாழ்ந்தவர். ஆக அவர் தனது காலத்திற்கு முன்பு வாழ்ந்த சிவத்தொண்டர்கள் பற்றிய குறிப்பினை தனது பெரிய புராணத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பிறகு வந்தவர்கள் சேக்கிழாரைப் போன்று சிவத்தொண்டர்கள் பற்றி குறித்து வைக்காததால் இந்தப் பட்டியல் நீளவில்லையே தவிர, இன்றளவும் உண்மையான சிவபக்தியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அடியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகம் உள்ளவரை சிவத்தொண்டர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
?இரு பிறப்பாளன் என்பவன் யார்?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
த்விஜன் என்று சொல்வார்கள். அதாவது இரண்டு ஜன்மாக்களை எடுப்பவன் என்று பொருள். உபநயனம் என்றழைக்கப்படும் பிரஹ்மோபதேசம் பெற்று முறையாக அனுஷ்டானத்தைப் பின்பற்றி தங்கள் தர்மத்தில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழும் அந்தணரை இரு பிறப்பாளன் என்று அழைப்பார்கள்.
?வீட்டில் அசைவம் சாப்பிட்ட பின்பு பூஜை அறையில் விளக்கேற்றலாமா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.
அசைவம் என்றில்லை, அது சைவ உணவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு முன்புதான் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்தபின்புதான் உணவருந்த வேண்டும். இதில் சைவ, அசைவ பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
?திதி சூன்யம் என்று பஞ்சாங்கத்தில் ஒரு பட்டியல் உள்ளது? அதனை எதற்கு பார்க்க வேண்டும்?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
திதி என்பது மருவி தேதி என்று ஆகியிருக்கிறது. திதி சூன்யம் என்றால் தேதி இல்லாத நாள், அதாவது முழுமையடையாத நாள் என்று பொருள். ஆக இந்த நாளிலே செய்கின்ற செயல்கள் முழுமை பெறாது என்பதால் இந்தப் பட்டியலை பஞ்சாங்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமான செயல்களை அந்த நாட்களில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
?கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
– பி.கனகராஜ், மதுரை.
சாமுத்ரிகா லட்சணத்தின்படி, கன்னத்தில் குழி விழும் நபர்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் காணப்
படுவார்கள். அவர்களைக் காணும்போது மற்றவர்களுக்கு தங்களையும் அறியாமல் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இதுபோன்ற காரணங்களால் கன்னத்தில் குழி விழுவது என்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
?யாருக்காவது ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்றால், மனைவி இடதுபுறமாக நிற்க வேண்டுமா? வலது புறமாக நிற்க வேண்டுமா?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.
ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் தர்மபத்தினி என்பவர் எப்பொழுதும் கணவனுக்கு வலதுபுறம்தான் நிற்க வேண்டும். அது ஆசீர்வாதம் செய்யும்போதும் சரி, ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்போதும் சரி, எப்பொழுதுமே மனைவி கணவனின் வலதுபுறம்தான் நிற்க வேண்டும். மனைவி என்பவள் கணவனுக்கு வலதுகரமாக செயல்பட வேண்டும் என்பதே இதற்கான காரணம். விதிவிலக்காக ஸ்நானம், ஊஞ்சல், சயனம் போன்ற சமயங்களில் மட்டும் மனைவி கணவனுக்கு இடதுபுறத்தில் இருக்க வேண்டும். அதாவது புண்ணிய தீர்த்தங்களில் தம்பதியராக நீராடும் போதும், சஷ்டிஅப்த பூர்த்தி முதலான சாந்தி அபிஷேகங்களின் போதும், ஊஞ்சலில் ஒன்றாகஅமர்ந்திருக்கும்போதும், படுக்கையிலும், மனைவி கணவனுக்கு இடது புறத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர் பார்வதி தேவியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார்.
“பார்வதீ வாம பாகம்’’ என்று சொல்வார்கள். பரமேஸ்வரனின் இடதுபுறத்தை பார்வதி அன்னையானவர் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது போல மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளின்போது மட்டும் மனைவி கணவனுக்கு இடதுபுறத்தில் இருக்க வேண்டும்.
?செய்த துரோகத்திற்கும் தாயாரின் சாபத்திற்கும் பரிகாரம் உண்டா?
– எஸ்.அமுல்ராஜ், கரூர்.
இல்லை. அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
?பாதயாத்திரை வருகிறேன் என்று வேண்டுதல் செய்துவிட்டு உடம்பிற்கு முடியாவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?
– வண்ணை கணேசன், சென்னை.
எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது அவசியம் பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டும். மாறாக, இதற்கு மேல் நிச்சயமாக உடல்நிலை ஒத்துழைக்காது என்று தெரியவரும் பட்சத்தில் யார் வேண்டுதலை மேற்கொண்டார்களோ அவருக்கு பதிலாக அவருடைய வாரிசுகள் அதனைச் செய்து முடிக்க வேண்டும். எப்படி ஒருவர் சம்பாதிக்கும் சொத்தானது வாரிசுகளுக்கு உரிமையாகிறதோ, அதே போல அவர் வாங்கிய கடனையும் அவரது வாரிசுகளே செலுத்த வேண்டியதாகிறது. அதேபோல, நேர்த்திக்கடன் என்பதையும் ஒருவரால் செய்ய இயலாவிட்டால், அவரது வாரிசுகள் அவசியம் அதனைச் செய்து முடிக்க வேண்டும்.
The post ஏன்? எதற்கு ? எப்படி? appeared first on Dinakaran.