சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு செண்பகாதேவி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

4 hours ago 3

தென்காசி: குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்குற்றாலத்திற்கு இணையான அகஸ்தியர் அமர்ந்த பொதிகை மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 3ம்தேதி காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் சிறப்பு அபிஷேக. அலங்கார தீபாராதனையும் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள், வில்லிசை, நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து. செண்பகாதேவி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்பு செண்பகாதேவி அருவிக்கரை அருகில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் உள்ள அகஸ்தியர் பாதத்தில் வைத்து அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து செண்பகாதேவி அருவியில் வைத்து சந்தனம், பன்னீர், குங்குமம், மலர்களால் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அப்போது அருவி தடாகத்தில் உள்ள தண்ணீரில் மஞ்சள் கலந்து மஞ்சள் நீராக காட்சியளித்தது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடத்தப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்டளைதாரர்கள் மற்றும் அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, வக்கீல்கள் சண்முகசுந்தரம், சரவண சேதுராமன், சர்வோதயா கண்ணன், எலக்ட்ரிசியன் சுரேஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உதவி ஆணையாளர் ஆறுமுகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தர், ராமலட்சுமி, சுந்தர்ராஜ், வீரபாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி உதவி வன பாதுகாவலர் நெல்லைநாயகம், தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவர் சங்கர்ராஜா, வனவர் மோகன், வனக்காப்பாளர் முத்துசாமி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

The post சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு செண்பகாதேவி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article