சித்திரை பிரம்மோற்சவம்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

3 days ago 4

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவிற்காக 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேர் வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்,  ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து காலை 7.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரடியிலிருந்து புறப்பட்ட தேர், பணக்கல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.30 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பலர் திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மோர், குளிர் பானங்கள், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்.

விழா பாதுகாப்புப் பணியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின் வெற்றிச்செல்வன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சித்திரை பிரம்மோற்சவ விழாவில் வரும் 10-ம் தேதி (நாளை மறுநாள்) காலை ஆள்மேல் பல்லக்கு மற்றும் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

விழாவின் கடைசி நாளான 11-ம் தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கு, 11.30 மணிக்கு த்வஜ அவரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Read Entire Article