சிதாரே ஜமீன் பர் !

3 hours ago 1

‘‘அவரவருக்கு அவரவர் வாழ்க்கை சாதாரணம்தான்”… இந்த ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டு மிக அற்புதமான படம்/பாடம் கொடுத்திருக்கிறார் ஆமிர் கான். எந்த இந்திய ஸ்டார் கிரீடமும் இல்லாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டு சக மனிதராக ஒரு படம் கொடுத்திருக்கும் ஆமிர்கானுக்கு பாராட்டுகள். விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ படங்களை நம் இந்திய சினிமா கடந்து வந்திருக்கிறது. படம் முழுக்க ஒரு ஃபைனல், அதற்கான பயிற்சிகள், நுணுக்கங்கள், வெற்றி மேடை இப்படித்தான் அப்படங்கள் இருக்கும். ஆனால் இந்த படம் சிறப்பு மனிதர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான விளையாட்டுப் படம்.

ஜூனியர் கூடைப்பந்து பயிற்சியாளர் குல்ஷன் (ஆமிர் கான்). சீனியருடன் பயிற்சி கொடுப்பதில் மோதல், அதில் அவமானப்படுத்தப்பட வாய்த் தகராரு, கன்னத்தில் அறையாக மாறுகிறது. இன்னொரு புறம் மனைவி சுனிதாவுடன் சண்டை (ஜெனிலியா) காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தன் அம்மா வீட்டில் வாழ்க்கை. இதனால் மனமுடைந்த குல்ஷன் குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்து உண்டாக்கி காவலர்களிடம் சண்டையிட்டு தண்டனை பெறுகிறார். பெரும்பாலும் சமூகத்தில் நல்ல திறமையான மனிதர்கள், மற்றும் அந்தஸ்த்துடன் இருப்பவர்கள் செய்யும் முதல் தவறுக்கு சிறை தண்டைக்குப் பதில் ஒரு சில சமூக சேவைகளில் வேலை செய்யுமாறு நீதிமன்றம் ஆணையிடும். அப்படி மனவளர்ச்சி குறைப்பாடுள்ளவர்களுக்காகவே இயங்கும் விளையாட்டு அகாடமியில் உள்ள கூடைப்பந்து குழுவுக்குப் பயிற்சி கொடுக்க நியமிக்கப் படுகிறார் குல்ஷன். அவர்களை தேசிய அளவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பும் பொறுப்பு குல்ஷனுக்கு.

மனவளர்ச்சி இல்லாமல் டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம், உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளவர்களை கலாய்க்கப் பயன்படுத்தும் வார்த்தைகளால் அடையாளப் படுத்தியதற்காகவே அபராதங்களையும் பெற்று வருகிறார் குல்ஷன். இதனால் துவக்கத்தில் இருந்தே அந்தக் குழுவுக்கு வேண்டா வெறுப்பாக பயிற்சி கொடுக்கத் துவங்குகிறார். அகாடமியின் நிர்வாகி கதார் பாஜி ( குர்பல் சிங்)… ‘ உங்களுக்கு உங்க வாழ்க்கை சாதாரணம், அவங்களுக்கு அவங்க வாழ்க்கை சாதாரணம்‘ என்னும் அறிவுரை கூற கதை ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் பயிற்சிகளுக்கிடையே யாரை அவர் கிண்டலடித்தாரோ அவர்கள் மூலமாகவே வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொள்கிறார் குல்ஷன். குழுவில் இருக்கும் அத்தனைப் பேருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஹோட்டலில் க்ளீனிங் வேலை, மெக்கானிக், ஹேர்டை ஃபேக்டரியில் வேலை , விலங்குகள் பராமரிப்பு, என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் சம்பளத்திற்கு பணி செய்துகொண்டே இங்கே விளையாட்டுப் பயிற்சியும் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொருவர் பின்புலமும் கேட்கக் கேட்க படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே கண்கள் கலங்கும். பயிற்சிகள் தீவிரம் அடைகிறது, ஒவ்வொரு போட்டிகளாக வெற்றியும் பெறுகிறார்கள். சிறு வயதிலேயே விட்டுச் சென்ற தந்தை காரணமாக அன்னையின் வளர்ப்பில் வளரும் குல்ஷன் எப்படிப்பட்ட பையனாக இருப்பார்? எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவராக, சக மனிதர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவராக, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறவராக, இன்னும் தன்னைச் சுற்றி நடக்கும் இயல்பான அத்தனையையும் கேள்வி கேட்பவராக இருப்பார். அதற்கெல்லாம் சேர்த்து வாழ்க்கைப் பாடமாக மாறுகிறது குல்ஷனின் இந்த மூன்று மாதங்கள்.

‘அவங்க எல்லாம் சப்ப பசங்க… ஓட விடுவோம்’ இப்படி குல்ஷன் ஒரு போட்டியில் சொல்ல ‘தப்பு சார், நாம ஜெயிக்கறதுக்காக விளையாடணுமே தவிர இன்னொருத்தங்களை அசிங்கப் படுத்தறதுக்காக இல்ல!’ என்கிற கோலுவின் வார்த்தைகள் நம் குழந்தை வளர்ப்புக்கான அறிவுரையாகவும் பளிச்சிடுகிறது. ‘நம்மள விட அவங்க ஜீனியஸ், சொன்னா புரிஞ்சுப்பாங்க சார்’ என்கிற கதார்ஜி‘உன் உயரத்துக்கு கூடைப்பந்து வீரரா நீ, அடுத்தவங்கள பாடி ஷேமிங் செய்யாதே’, ‘உனக்காக நான் போராடினேன், அவங்களுக்காக நீ போராடு’ என்கிற குல்ஷனின் அம்மா ப்ரீதோ‘அப்போ அம்மா வாழ்க்கை, அவங்களுக்குன்னு ஒரு பெர்சனல் வாழ்க்கை இல்லையா?’, ‘எல்லார் மாதிரியும் இயல்பான ஒரு குடும்பம் வேணும்ன்னு நினைக்கற என்னோட வாழ்க்கை?’ என்கிற மனைவி சுனிதாவின் கேள்வி. இப்படிப் படம் முழுக்க ‘‘மனிதர்களின் இயல்பை இயல்பாக ஏற்றுக்கொள்” என நமக்கும் சேர்த்து வகுப்பெடுக்கிறது இந்தப் படம்.

ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இப்படம் ஸ்பானிஷ் திரைப்படமான ‘சாம்பியன்ஸ்‘ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட கதை. அதற்கு வசனம் எழுதியிருக்கிறார் திவி நிதி ஷர்மா. தமிழிலும் இப்படம் வசனம், பாடல்கள் என மிக இயல்பாகவே டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. ‘மனிதர்களுக்குள் இருக்கும் இயல்பை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு வாழப் பழகு , அப்போதுதான் உன் இயல்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ , ‘மாற்றங்கள் இயல்பானவை’ என்பதே ‘சிதாரே ஜமீன் பர்’ எடுக்கும் வாழ்க்கைப் பாடம்.
– மகளிர் மலர் குழு

The post சிதாரே ஜமீன் பர் ! appeared first on Dinakaran.

Read Entire Article