சிதம்பரம், பிப். 5: சிதம்பரம் அருகே இரை தேடி சாலையில் முதலை சென்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில், ராட்சத முதலை ஒன்று இரவு நேரத்தில் சாலை நடுவே ஒய்யாரமாக நடை போட்டு இரையைத் தேடி சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
முதலையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளான பழைய கொள்ளிடம், வல்லம்படுகை, வேளக்குடி, அகரநல்லூர், பெராம்பட்டு திட்டுகாட்டூர், அத்திப்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில், பெரிய அளவில் இருந்து, சிறிய அளவிலான முதலைகள் காணப்படுகிறது.
வனத்துறையினர் நீர்நிலைகள் அருகில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும், தவறுதலாக சில விவசாயிகள் மற்றும் கால்நடைகள் தண்ணீரில் இறங்கும்போது முதலைகள் கடித்து இழுத்து சென்று விடுகிறது. எனவே இப்பகுதியில் முதலைப் பண்ணை அமைத்தால் மட்டுமே இதுபோன்ற ராட்சத முதலைகளை பிடித்து முதலை பண்ணையில் விட்டுவிடலாம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் முதலைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும், குடியிருப்பு பகுதிகளில் முதலைகள் பிடிபடுவதும், அதனை வக்காரமாரி ஏரியில் விடுவதும், அவ்வாறு விடப்படும் முதலைகள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைவதும் தொடர் கதையாக உள்ளது. இவ்வாறு பிடிபடும் முதலைகளை, சென்னையில் உள்ள முதலை பண்ணையில் விடவேண்டும். அல்லது இதற்கென நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் முதலைப் பண்ணை அமைத்துக்கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிதம்பரம் அருகே இரவில் பரபரப்பு இரை தேடி சாலையில் சென்ற முதலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.