சென்னை: பொங்கல் தொகுப்புடன் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், வேட்டிகளில் பருத்தியுடன் பாலிஸ்டர் கலப்படம் செய்யப்படுவதாகவும் நேற்று முன்தினம் பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பொங்கல் 2025 திட்டத்திற்கு மொத்தத் தேவையான 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய ஆணை வெளியிடப்பட்டது.
சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்படும் நூல் ரகங்கள், அரசு நூல் கிடங்குகளில் பெறப்பட்டு, நூல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை சிட்ராவின் விசைத்தறி சேவை மையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரப்பரிசோதனை மையங்களில் தரப்பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு பெற்ற நூல் மாதிரிகள் அடங்கிய லாட்டுகள் மட்டுமே, வேட்டி சேலைகள் உற்பத்திக்காக அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் 2025 திட்டத்திற்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் முகமை நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி பண்டல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தரப்பரிசோதனையின் போது, பாலிகாட் பாவு நூலில் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ளதென கண்டறியப்பட்ட, சுமார் 13 லட்சம் வேட்டிகள் கொண்ட பண்டல்கள், சம்மந்தப்பட்ட கொள்முதல் முகமை நிறுவனங்களிலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிராகரிக்கப்பட்டுள்ள 13 லட்சம் வேட்டிகளுக்கு பதிலாக, நிர்ணயக்கப்பட்ட தர அளவீடுகளின்படியான வேட்டிகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செலவில் திருப்பி அளிக்க சம்மந்தப்பட்ட சரக கைத்தறி உதவி இயக்குநர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்க செயலாட்சியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பொங்கல் 2024 திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டிகளை தரப்பரிசோதனை செய்ததில் வேட்டிகளில் இருந்து மாதிரி எடுத்து அதில் உள்ள பாவு நூலின் பருத்தி தன்மையினை பரிசோதிக்க சிட்ரா விசைத்தறி சேவை மையத்திற்கு அனுப்பப்பட்டதில், வேட்டியில் 100சதவீத காட்டன் பாவு நூல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் 2024 தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. ஆதலால்,அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சிட்ரா விசைத்தறி சேவை மைய பரிசோதனையில் வேட்டியில் 100% காட்டன் பாவு நூல் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது: பாஜ தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் காந்தி பதிலடி appeared first on Dinakaran.