
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வாகன சேவை நடைபெற்றது. பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாடவீதிகளில் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.