டெல்லி: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த பிரதமர் லாரன்ஸ் வாங்-க்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் லாரன்ஸ் வாங் ஆட்சியை தக்கவைத்தார்.
சிங்கப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 97 தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல்கட்சி போட்டியின்றி 5 இடங்களை கைப்பற்றியிருந்தது. இதனால் எஞ்சிய இடங்களுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது. இதில், 60 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்யும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி போட்டியிட்டது.
ஆளும் மக்கள் செயல்கட்சி 87 இடங்களில் போட்டியிட்டது. மொத்தம் 27.6 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மாலை 5 மணி வரை 82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்து தோரயமாக 100 வாக்குகள் எண்ணும் மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இதில் ஆளும் மக்கள் செயல் கட்சி 82 இடங்களை பெற்று அமோக வெற்றியை உறுதி செய்தது. எனவே முழுமையான வாக்கு எண்ணிக்கையிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்கு முன் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங்க் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார். மக்கள் செயல் கட்சியின் தொடர்ச்சியான 14வது வெற்றி இதுவாகும்.
இந்நிலையில் லாரன்ஸ் வாங்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “பொதுத் தேர்தலில் உங்கள் மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவும் சிங்கப்பூரும் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இது நெருக்கமான மக்களுக்கிடையிலான உறவுகளால் ஆதரிக்கப்படுகிறது. எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் முன்னேற்றுவதற்காக உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த லாரன்ஸ் வாங்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.