காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார் மற்றும் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைக்கால் அம்மையார் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 1ம் தேதி முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், சிவா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம்
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நவ கைலாயத்தில் முதலாவது தலமாக சூரியனுக்கு அதிபதியாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 2005 செப்.4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இந்தக் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 7.45 மணிக்கு உலகம்மை சமேத பாபநாச சுவாமி விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள் சமகால மகா கும்பாபிஷேகம், காலை 8.10 மணிக்கு பாபநாச சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், காலை 8.20 மணிக்கு உலகம்மை மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
The post 17 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.