சிங்கப்பூர், துபாயில் உலக தரத்தில் இருப்பதுபோல சென்னையில் ரூ.46 கோடியில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி

3 months ago 15

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளதுபோன்று உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’வை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில், தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய போது ‘‘சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ் வளர்ச்சிக்கும், இலக்கியம், கலை, காலாச்சார வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த கலைஞர் நினைவைப் போற்றும் விதமாக சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்ட சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்கா அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் நேற்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். பூங்காவின் அழகை சுமார் 1 மணி நேரம் 10 நிமிடம் மிகவும் ரசித்து பார்த்தார். அப்போது, உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஆர்க்கிட் குடில், கண்ணாடி மாளிகை, அலங்கார வளைவு பசுமை குகை, பறவையகம், இசை நீரூற்று போன்றவற்றை வடிவமைத்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பூங்காவில் உள்ள வெளிநாட்டு பறவைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பழம் மற்றும் தானியம் வழங்கினார்.

குழந்தைகளுக்கான ரயில் வண்டி சேவையையும் தொடங்கி வைத்தார். இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய பூங்கா நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம் (செல்பி பாயிண்ட்), தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீள பனிமூட்டப்பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்ட ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுரஅடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ள இசை நீரூற்று மிகவும் தத்ருவமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மைசூர் பிருந்தாவனத்தில் மட்டுமே இதுபோன்ற நீரூற்று உள்ளது. தற்போது, சென்னை மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இசை நிரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதை இரவு 6.30 மணி, 7.30 மணி என 2 காட்சிகளாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர், எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் சுதர்சனம், தாயகம் கவி, வெற்றியழகன், நா.எழிலன், த.வேலு, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை துறை இயக்குநர் குமாரவேல்பாண்டியன், வேளாண்மை துறை இயக்குநர் முருகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* காய்கறிகள் அருங்காட்சியகம்
உலகத்திலேயே 2வது பெரிதாக, ஆசியாவிலேயே மிகவும் பெரியதாக இந்தியாவிலே முதன்முறையாக ஹோலோகிராப் எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் பல்வேறு காய்கறிகள் பற்றி தெரிந்துகொள்ள தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பந்தல் காய்கறிகள், மண்ணுக்குள் விளையும் காய்கறிகள், கொய் மலர்கள், வாசனை மற்றும் தோட்டக்கால் பயிர்கள், வெப்பமண்டல காய்கறிகள், குளிர்பிரதேச பழங்கள், முக்கனிகள், மிதவெப்பமண்டல பழங்கள், பட்டுப்புழு கைவினை பொருட்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் ஒரு அறையில் பூக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒரு பூவை நாம் தொட்டால், அது பெரிதாக 360 டிகிரியில் விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பூங்காவை சுற்றிப்பார்க்க கட்டணம் எவ்வளவு?
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கான நுழைவுச் சீட்டினையும், நுழைவுகட்டணம் குறித்தான தகவல்களையும் https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம்.

The post சிங்கப்பூர், துபாயில் உலக தரத்தில் இருப்பதுபோல சென்னையில் ரூ.46 கோடியில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article