
சென்னை,
ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அறிவு, அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிக்கிட்டு பாடலின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'கூலி' படத்தின் பாடலான சிக்கிட்டு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சிக்கிட்டு பாடலை பற்றி அனிருத் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் "சிக்கிட்டு பாடலின் வீடியோவை லோகேஷ் கனகராஜ் மிக அருமையாக எடுத்து இருந்தார். முதன்முதலில் அந்த வீடியோவை பார்த்த போது நாங்கள் மிரண்டுவிட்டோம். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரை நாம் இந்த கெட்டப்பில் பார்க்கிறோம். ரஜினி சார் ஷூட்டிற்கு முன்பு எந்த பாடலையும் கேட்க மாட்டார். இப்பாடலின் முதல் நாள் ஷூட்டிங் முடிந்த பின்பு இப்பாடல் அவருக்கு பிடித்ததாக கூறினார்" என கூறியுள்ளார்.