
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் வெளியானது. படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டன. அதாவது பைரஸி என்ற இணைய தளத்தில் முழு படமும் எச்.டி வடிவில் லீக் ஆகி இருக்கிறது. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
திரையரங்கில் 'சிக்கந்தர்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் இந்திய அளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் சிக்கந்தர் படத்தில் பணியாற்றியது குறித்து சந்தோஷ் நாராயணன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'சிக்கந்தர்' படத்தில் சில மாதங்கள் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்த ஏ.ஆர். முருகதாஸ் ,தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவிற்கு நன்றி. இசையமைக்கும்போது சல்மான் கான் மற்றும் சாஜித் உடன் நடந்த உரையாடல்களை நான் என்றும் நினைவில் வைத்துக்கொள்வேன். குறிப்பாக நன்றாக இசையமைப்பேன் என்று என்னை நம்பியதற்காக சல்மானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக நான் அமைத்த இசை சல்மான், முருகதாஸ், ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்னுடன் பணியாற்றிய இசை மற்றும் தொழில்நுட்பக் குழுவிற்கு நன்றி. சினிமாவையும் சல்மான் கானின் நடிப்பையும் கொண்டாடுவோம். இந்தப் படம் மற்றும் இசையைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள் . அது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.