மும்பை,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.
சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 'சிக்கந்தர்' பட டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, டீசரை சல்மான் கானின் பிறந்த நாளான இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவின் காரணமாக இந்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் நாளை காலை 11.07 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.