சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்

3 months ago 18

*சிறப்பு டாக்டர்கள் தேவை

*காரைக்குடி மக்கள் வலியுறுத்தல்

காரைக்குடி : காரைக்குடியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கு தேவையான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடி ரயில்வே பீடர் சாலை மற்றும் திருச்சி பைபாஸ் சூரக்குடி சாலை என இரண்டு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. சிவகங்கையில் மருத்துவகல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்ட பின்னர் அங்கிருந்த தலைமை மருத்துவமனை இங்கு செயல்பட துவங்கியது. இங்குள்ள தலைமை மருத்துவமனையில் தற்போது 300 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் வருகின்றனர். பொதுவாக இங்கு சுகபிரசவம் பார்க்கப்படுவதால் பிரசவத்திற்கு பெண்கள் அதிகளவில் வந்தனர். பொது மருத்துவத்துக்கு தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் வரும் நிலையில், பிரசவம் மற்றும் அது சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மட்டும் 50 பேருக்கு மேல் வருகின்றனர்.

மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்பட்டது. பல்வேறு வகையான விபத்தில் பாதிக்கப்பட்டு தினமும் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். தலைமை மருத்துவமனையில் 40 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 22 பேர் மட்டுமே உள்ளனர். சீமாங் மையத்தில் 4 டாக்டர்களுக்கு ஒருவர் தான் உள்ளனர். இதனால் தாய்மார்கள் பெரிதும் அவதியடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சி.டி ஸ்கேன் பார்ப்பதற்கு உரிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைந்த மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

தவிர போதிய டாக்டர்கள் இல்லாததால் கூடுதல் வேலைபளு காரணமாக பணியில் இருக்கும் டாக்டர்களும் பெரும் சிரமத்திற்கு இடையே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இக்காலியிடங்களை பூர்த்தி செய்து தலைமை மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு தொழில் வணிகக்கழகம், பொதுமக்கள் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், இங்குள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். சிறந்த சிகிச்சை கிடைப்பதால் இம்மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது முழுமையான மாவட்ட தலைமை மருத்துமனையாக செயல்பட வேண்டும். அனைத்து துறை சிறப்பு டாக்டர்கள் வேண்டும். டாக்டர்கள் தேவை குறித்த பட்டியல் இடப்பட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதன் மூலம், இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. நமது கோரிக்கையையும் தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து உரிய நடவடிப்பை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டும் வளர்ச்சியடையாத நிலையே தொடர்கிறது. அதிநவீன மருத்துவச்சிகிச்சை கருவிகள் இருந்தும் அதற்கான சிறப்பு டாக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிவகங்கை, மதுரைக்கு என அனுப்பும் நிலை உள்ளது. டாக்டர்கள் பற்றக்குறை உள்பட அனைத்து பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article